மத்திய அரசு வழங்கும் நிதியை முதலமைச்சர் ரங்கசாமி முழுமையாக மக்களுக்கு செலவிடுவதற்கு ஆசைப்படுகிறார் என்று குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் பேசினார்.
புதுச்சேரி , மத்திய அரசு வழங்கும் நிதியை முதலமைச்சர் ரங்கசாமி முழுமையாக மக்களுக்கு செலவிடுவதற்கு ஆசைப்படுகிறார் என்று குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் பேசினார். புதுவை காந்தி சிலை எதிரே இந்திய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து 'சாராஸ்' கைவினைப் பொருள் கண்காட்சி கடந்த 17ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்து நேற்று நிறைவடைந்தது. இந்த கண்காட்சியில் 16 மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. 164 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 10 நாட்களில் மொத்தம் ரூ.72.82 லட்சம் பொருட்கள் விற்பனையானது. கடந்த 2019 ஆம் ஆண்டு 35 லட்சம் மட்டுமே விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், கைவினைப் பொருட்கள் விற்பனையில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் அமைத்த அரங்கில் அதிகப்படியான விற்பனை நடந்து முதலிடத்தையும், உத்தர பிரதேசம் இரண்டாம் இடத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாம் இடத்தையும், ஆந்திரா நான்காவது இடத்தையும் பிடித்து விற்பனையில் சாதனை படைத்தது. விற்பனையில் சாதனை படைத்த அனைவருக்கும் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி அமைச்சர் பேசுகையில், பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் கிராமப்புற மக்களின் மேம்பாடு குறித்து அவரது ஒவ்வொரு திட்டமும் கிராமத்தை நோக்கியே உள்ளது. கிராமப்புற உள்கட்டமைப்பு கிராம புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் மோடி திட்டங்களை வழங்கி வருகிறார். 75 ஆவது சுதந்திர அமுதப் பெருவிழாவையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் கைவினைப் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற சாராஸ் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை கண்காட்சியோடு மட்டும் பார்க்காமல் பல்வேறு மாநிலத்தின் கலாச்சாரம் மேம்பாடு சந்தைப்படுத்துதல் ஆகிய பற்றி இருந்து பொது அறிவை நாம் பெறுகிறோம். மத்திய அரசு வழங்கும் ஒவ்வொரு நிதியையும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பொது மக்களுக்கு முழுமையாக செலவிட வேண்டும் என்ற ஆசையோடு உள்ளார். இவ்வாறு பேசினார். இதில், இளநிலை பொறியாளர் ராமன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி வைசாக் பாகி, அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி இணை அதிகாரி லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






