புதிய பஸ்நிலையம் முன்பு டெம்போ டிரைவர்கள் மறியல், 2வது நாளாக ஸ்டிரைக் தொடர்கிறது
புதுச்சேரி போக்குவரத்துத்துறை சார்பில் ராஜா தியேட்டர் வழியாக செல்லும் டெம்போக்களுக்கு புதுவையில் அனைத்து பகுதியிலும் இயக்க புதிய உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு பிற வழித்தட டெம்போ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைத்து வழித்தடங்களில் இயக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். இதை வலியுறுத்தி நேற்றைய தினம் ராஜா தியேட்டர் வழித்தடம் தவிர்த்த மற்ற வழித்தட டெம்போ டிரைவர்கள் வேலைநிறுத்தம் செய்து, போக்குவரத்துத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
டெம்போக்களை போக்குவரத்து துறை அலுவலக வளாகத்திலேயே நிறுத்தினர். இந்த போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்ந்தது. இன்றும் அவர்கள் டெம்போக்களை இயக்கவில்லை. புதிய பஸ்நிலையம் முன்பு ஒன்று திரண்ட டெம்போ டிரைவர்கள் அங்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து டிரைவர்கள் மறியலை கைவிட்டனர். இருப்பினும் உரிமம் ரத்து செய்யப்படும் வரை ஸ்டிரைக் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?