புதுச்சேரி மநிலம் வீராம்பட்டினத்தில் உள்ள பிரசித்தபெற்ற ஸ்ரீ செங்கழுநீரம்மன் தேவஸ்தான ஆடம்பர தேர்த் திருவிழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தேரைவடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மீனவ கிராமமான வீராம்பட்டினத்தில் பழமை வாய்ந்த செங்கழுநீரம்மன் தேவஸ்தானம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையிலிருந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக வீராம்பட்டினமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா நடைபெறும். ஆறாம் வெள்ளியன்று முத்துப் பல்லக்கு திருவிழா நடைபெறும். இந்த ஆலயத்தில் உள்ள தேவதாருவின் முழு உருவம் மரத்தால் செய்யப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் செங்கழுநீரம்மன் தேரடி வீதியில் உலா வந்து தேர் முற்றத்தில் வந்து நிற்கும். இந்த தேர் திருவிழாவின் சிறப்பு, பிரஞ்சு ஆட்சிக்காலம் முதலே ஆளுநர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைப்பர். இந்த வழக்கம் இன்றும் அனுசரிக்கப்படுகிறது.
இதன்படி செங்கழுநீரம்மன் தேவஸ்தான தேர்த் திருவிழா வெளளிக்கிழமையான இன்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர்உள்பட முக்கிய பிரமுகர்கள், கலந்து கொண்டனர்.
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
வீராம்பட்டினம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் நலனுக்காக பல்வேறு நபர்கள், சமூக அமைப்புகள் சார்பில் அன்னதானம், தண்ணீர், மோர்ப்பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
What's Your Reaction?






